அதிமுக பொதுக்குழு எப்போது? - சசிகலாதான் பொதுச்செயலாளரா?

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (18:24 IST)
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.


 

முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று குழப்பம் நீண்டு வருகிறது. ஒரு பக்கம் ’சின்னம்மா’ சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளராக ஆக வேண்டும் பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிக்கைகளிலும் விளம்பரங்கள் ஏகத்துக்கும் கொடுக்கப்பட்டன. இதன் அதீத வெளிப்பாடாக மதுரையில் ‘சசிகலா எனும் நான்’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

ஆனால், அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மற்றும் அதிமுக அபிமானிகள் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்பதை விரும்பவில்லை. இதன் வெளிப்பாடாகவே ஆங்காங்கே போஸ்டர்கள் கிழிக்கப்படுவதும், சாணி அடிக்கப்படுவதும் நிகழ்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும், சசிகலாவிற்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சசிகலாவின் குடும்பம் ஓரங்கட்டுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் ‘ஜெயலலிதா தீபா பேரவை’ என்ற பெயரில் புதிதாக கட்சித் தொடங்கி உள்ளனர்.

இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள வானகரம் உள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழு நடக்க உள்ளதாகவும், வரும் 29ஆம் தேதி அன்று பொதுக்குழுவை நடத்துவதற்கு உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்