துணை முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஜெயக்குமார் காட்டம்.!!

Senthil Velan
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:38 IST)
துணை முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
பா. சிவந்தி ஆதித்தனாரின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்துக்கு  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சென்னையில் சிவந்தி ஆதித்தனாருக்கு சிலை வைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை என்றார்.
 
தமிழக மீனவர்கள் இலங்கையில் செத்துப் பிழைக்கிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள், அவர்களது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இதையெல்லாம் கொஞ்சம் கூட தட்டி கேட்காமல் வேடிக்கை பார்க்கிறார் என்று ஜெயக்குமார் விமர்சித்தார்.
 
மேலும் அம்மாவே போய் சேர்ந்துட்டாங்க அப்போது எதற்கு அம்மா உணவகம் என பேசியதற்கு செத்துப்போன கருணாநிதிக்கு எதுக்கு கோடி ரூபாய் செலவில் நினைவிடம் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜெயக்குமார்  கலைஞர் அந்த காலத்தில் சொன்னார் திமுக சங்கர மடம் இல்லை  வாரிசு அரசியல் செய்வதற்கு என்றும், ஆனால் அவர் ஸ்டாலினை சிறுக சிறுக கொண்டு வந்தார் என்றும் வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
 
இந்த மூன்று ஆண்டுகளாக  உதயநிதி துணை முதல்வர் என்று மக்கள் மத்தியில்   பரப்பும் வேலையை மு.க ஸ்டாலின்  பார்த்து வருகிறார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். திமுகவில் பல மூத்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் கட்சிக்காக உழைத்து  மாடாக  தேய்ந்திருக்கிறார்கள் என்றும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்றும் திமுகவில் வேறு யாருக்கும் தகுதி இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


ALSO READ: திரைப்பட இயக்குனர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்வதா.? ராமதாஸ் கண்டனம்..!!
 
உதயநிதியை துணை முதல்வராக கொண்டுவருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் என்று ஜெயக்குமார் கூறினார். இந்த ஆட்சியில் மகனுக்கு முடி சூட்டும் வேலைதான் நடைபெற்று வருகிறது என்றும் நரி வலது போனால் என்ன, இடது போனால் என்ன நாட்டிற்கு ஒன்றும் நடக்காது என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்