கடந்த சில நாட்களுக்கு முன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனா, "சினிமாவில் இருந்து வந்தவர்கள் துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் திருமாவளவன் ஏன் துணை முதல்வர் ஆகக் கூடாது," என்று தெரிவித்தார்.
ஏற்கனவே திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் கூட்டணி பிரச்சனையில் இருக்கும் நிலையில், ஆதவ் அர்ஜுனா மறைமுகமாக உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்தது, இரு கட்சி தொண்டர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, திமுக வட்டாரத்தில் அவரது பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீலகிரி தொகுதி எம்பி ஆ. ராசா இதுகுறித்து கூறிய போது, "விடுதலை சிறுத்தைகள் இயக்கத்திற்கு புதிதாக வந்திருப்பவர் ஆதவ் அர்ஜுனா. அவர் திருமாவளவன் ஒப்புதலுடன் இதைப் பேசியிருக்க மாட்டார் என்று நம்புகிறோம். திருமாவளவன் இந்த கருத்தை ஏற்கமாட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள்.
இப்படி பேசுவது கூட்டணி அறத்திற்கு நன்றாக இருக்காது. இவ்வாறு குழப்பத்தை விளைவிக்கிறவர்கள் மீது, திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.