திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது வளையக்காரன் தோட்டம். இங்கு 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் இறந்தவர்களை புதைக்க வளையக்காரன் தோட்ட கிராம சாலை புறம்போக்கு இடத்தை 200 ஆண்டாக சுடுகாடாக உபயோகித்து வந்தனர். ஈமக்காரியங்களுக்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சடங்கு செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை என்பதால் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து சடங்கு செய்வதற்காக, சுடுகாட்டை சுத்தப்படுத்த கிராம மக்கள் நேற்று வந்தனர். அப்போது சுடுகாடு, கிணறு இருந்த இடங்கள் மண் மூடி சமன்படுத்தப்பட்டு வீட்டு மனையாக மாற்றப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இங்கு கட்டப்பட்டிருந்த சமாதிகளை சிலர் இரவோடு இரவாக இடித்து அழித்ததுடன் அங்கிருந்த கிணற்றையும் மூடிவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்கும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் திரண்டு சுடுகாட்டையும், கிணற்றையும் காணவில்லை, அதை மீட்டு தர வேண்டும் என புகார் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருமலைசாமி, பொன்னுசாமி, பாலு ஆகியோரிடம் காவல்துறையினர் கைது செய்து, விசாரனை நடத்தி வருகின்றனர்.