நயவஞ்சக சக்திகளுக்கு இரையாகிவிடக் கூடாது. திருமாவளவன் கடிதம்.

Mahendran
வெள்ளி, 8 நவம்பர் 2024 (10:24 IST)
திமுகவைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள்தான் நமது கூட்டணியை சிதறடிக்கப் பார்க்கிறார்கள். நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக் கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்” என தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்!
அண்மைக் காலமாக  அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும்  நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம்.
 
அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான "மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்" இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும்.
 
இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, திமுக'வைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம். இவர்களில் கட்சி அடையாளமில்லாத ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உள்ளனர்.
 
இவர்கள் கடந்த 2019 நாளுமன்றப் பொதுத் தேர்தலிலிருந்தே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அவ்வப்போது நம்மை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொண்டே நமது கூட்டணிக்கெதிராக நம்மைச் சீண்டியும் தூண்டியும் வருகின்றனர். அவற்றுக்குப் பலியாகாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இயங்கிவருகிறோம். கடந்த காலங்களில் அத்தகைய அரசியல் சதிகளையும் முறியடித்திருக்கிறோம்.
 
"மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி" என்பது திமுக - விசிக உட்பட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஒரு 'கூட்டமைப்பாகும்'. 2017-இல் அது காவிரி நீர் உரிமைக்கான ஒரு போராட்டக் களத்தில் கருக்கொண்டது. அது அடுத்தடுத்து பல்வேறு போராட்டக் களங்களைச் சந்தித்தது. அவற்றினூடாக அதுவே ஒரு 'தேர்தல் கூட்டணி' யாகவும் பரிணாமம் பெற்று, தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது. 2019, 2021, 2024 பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறது.
 
இதனை கொள்கைப் பகைவர்களாலும் அரசியல் போட்டியாளர்களாலும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள இயலும்? 2026-இல் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்? எப்படியாவது  கூட்டணியைச் சிதறடித்து நமது வெற்றியைத் தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும். அவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு அடையாளங்களில் இயங்கினாலும் அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிப்பது மட்டும் தான்.
 
அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் கையாளும் உத்திகளுள் ஒன்றுதான், திமுகவுக்கும் திமுக  கூட்டணியிலுள்ள பிற கட்சிகளுக்கும் இடையில் கொம்புசீவும் முயற்சியாகும். அத்தகைய முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, திமுக - விசிக இடையே உரசலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் குரலெழுப்புகிறபோதெல்லாம்  ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளோடு இயல்பாக எழும் சின்னஞ்சிறு முரண்களையும்கூட கூர்தீட்டுவதில் அதிவேகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
அத்தகைய சதிச் செயல்களுக்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
குறிப்பாக, "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டையொட்டி, பரந்த பார்வையோடு பொதுநல நோக்கோடு,  "அதிமுகவும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமே" என நாம் கூறியதை,  ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நமது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எவ்வளவு வேகமாக களத்தில் இறங்கினர் என்பதை நாடறியும். அதனை நாம் மிக இலாவகமாக முறியடித்தோம்.
 
அடுத்து, "ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு" என்னும் நமது கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, கொள்கை நிலைபாட்டை ஒரு கருவியாக கையிலெடுத்தனர்.
 
'முதன்முதலாக, புத்தம் புதிதாக இப்போது தான் நாம் இதனைப் பேசுகிறோம்' என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதுவும் ' எதிர்வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக திட்டமிட்டே ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குகிறோம்'- என வேண்டுமென்றே உண்மை நிலையைத் திரித்து, நம்மை திமுகவுக்கு எதிராக நிறுத்தி உரசலை உருவாக்கிட பெரும்பாடுபட்டனர். அதனையும் மெல்ல நீர்த்துப்போகச் செய்தோம்.
 
தற்போது,  த.வெ.க தலைவரும் நடிகருமான திரு. விஜய் அவர்களோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர்.
 
அவர் அண்மையில் அவரது மாநாட்டில் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.
 
நடிகர் விஜய் அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புடன் இதனை அறிவித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது 'விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசியுள்ளார்' என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன. அது  தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.
 
இதனையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நமது கொள்கைப் பகைவர்கள் மற்றும் அரசியல் களப் போட்டியாளர்கள் எனப் பலரும் பல்வேறு வகையிலான ஊக வாதங்களையும் கற்பனா வாதங்களையும் மனம்போன போக்கில் மானாவாரியாக இட்டுக்கட்டி அள்ளி இறைத்தனர்.
 
இந்நிலையில்தான், அதற்கு எதிர்வினையாக நம் தரப்பு கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டோம். எனவே, விஜய் அவர்களின் உரை குறித்து நமது நிலைப்பாடுகளை விவரிக்க நேர்ந்தது.
 
அவரது உரையை நாம் கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம். ஆனால், "வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்கைள" எப்படி நாம் கடந்துபோவது?
அவர்களுக்கு விடை சொல்லவேண்டும் என்பதைவிட,
என் உயிரின் உயிராய் எனக்குள் இயங்கும் உங்களுக்கு நமது கட்சியின் நிலை குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டியது தவிர்க்க இயலாத தேவையாகிறது.
 
ஆகவே தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன், திமுக தலைமை வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் கொண்டிருக்கிற அரசியல் உறவு தொடர்பாக விளக்கிட வேண்டிய நெருக்கடி எழுந்தது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும்  பங்குண்டு. அதாவது, நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும்  கூட்டணி. அதனை தக்க வைப்பதும் பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும். அதனைச் சிதறடிப்பதற்கோ சிதைப்பதற்கோ நாம் எவ்வாறு இடமளிக்க இயலும்? இதனையே அண்மையில் அறிக்கையாகவும் வெளியிட்டோம். தொலைக்காட்சி ஒன்றிலும் ஆங்கில நாளேடு ஒன்றிலும் நேர்காணல் அளித்து நமது நிலைபாட்டை வெளிப்படுத்தினோம்.
 
அதாவது, ஏற்கனவே நாம் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறோம். அதனை நிறுவிய ஓர்  உறுப்பியக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. எனவே, நமக்கு அதனைவிட்டு வெளியேறும் தேவை ஏதுமில்லை என்பதையும் அவ்வறிக்கை மற்றும் நேர்காணல்கள் மூலம் தெளிவுப்படுத்தினோம்.
 
எனினும், மீண்டும் அவர்கள் நம்மைக் குறிவைத்து அரசியல் சதிவலைகளைப் பின்னுகின்றனர். திசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளன்று "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்னும்  நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அவ்விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டுகின்றனர். நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கின்றனர்.
 
"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்னும் தொகுப்பினை 'விகடன் பதிப்பகமும்' 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் வியூக நிறுவனமும்  இணைந்து வெளியிடவுள்ளன. வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (விஓசி) என்பது நமது கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் அவர்களின் நிறுவனமாகும். 
 
இத்தொகுப்புக்கான அரும்பணிகளைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விகடன் பதிப்பகம் மேற்கொண்டு வருகிறது. 36 பேர்களின் கட்டுரைகளைப் பெற்று ஒரு நூலாகத் தொகுத்துள்ளனர்.
 
எனது விரிவான ஒரு நேர்காணலும் அதில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆனந்த விகடன் இதழைச் சார்ந்த சிலர் புது தில்லிக்கு வந்து, எனது நேர்காணலை குரல்பதிவு செய்துகொண்டனர். பின்னர் அவற்றை எழுத்தாக்கி இத்தொகுப்பில் இடம்பெற செய்துள்ளனர்.
 
புரட்சியாளர் அம்பேத்கரின் மைந்தர் யஷ்வந்த் அம்பேத்கர் அவர்களுடைய மகன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்களின் தங்கையின் கணவர்,  இடதுசாரி சிந்தனையாளர் திரு. ஆனந்த் டெல்டும்டே அவர்களின் கட்டுரை ஒன்றும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. நமது கட்சியின் பொதுச்செயலாளர்  தோழர் ரவிக்குமார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு 36 பேரின் கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
 
இந்தநூல் கடந்த ஏப்ரலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வெளியிடுவதாக தான் பதிப்பகத்தார் திட்டமிட்டனர். அப்போதே இந்த நூலின் வெளியீட்டு விழா குறித்தும் பேசினர். அதில் நானும் பங்கேற்க வேண்டுமென்றும் கோரினர். முறைப்படி இசைவுகோரி மடல் எழுதுவோம் என்றும் கூறினர். எனவே, அப்போதே நான் அதில் பங்கேற்க இசைவளித்துவிட்டேன்.
 
அந்நிகழ்வில் பங்கேறகுமாறு  தமிழ்நாடு முதலமைச்சரும் நமது கூட்டணியின் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், திரு. ராகுல்காந்தி, திரு. இந்து ராம், திரு. ஆனந்த் டெல்டும்டே போன்றோரை அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது தெரிவித்தனர். குறிப்பாக, நமது முதலமைச்சர் வெளியிட தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். அதன்படி, ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் தோழர் கலைச்செல்வன் அவர்கள், விகடன் பதிப்பகத்தின் பொது மேலாளர்  திரு.அப்பாஸ்அலி அவர்களின் கையொப்பமிட்ட அழைப்புக் கடிதம் ஒன்றை அக்டோபர்-10 அன்று எனக்கு அளித்தார்.
 
 அப்போது நடிகர் விஜய் அவர்களும் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினார். அப்போதைய சூழலில்  நடிகர் விஜய் அவர்களின் கட்சி மாநாடு (அக்- 27) நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது விஜய் அவர்களின் மாநாட்டு உரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நாளேடு ஒன்று "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சுப் போடுகிறது".
 
இந்த நூல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றியது என்பதால் அவரது பிறந்தநாளான ஏப்ரல் -14 அல்லது அவரது நினைவு நாளான திசம்பர்-06 ஆகிய ஏதேனும் ஒரு நாளில் வெளியிடுவதென தீர்மானிப்பது இயல்பான ஒன்றேயாகும். அதன்படியே, தற்போது திசம்பர் -06 அன்று இந்நிகழ்வை நடத்திட ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில், கட்சி சார்பற்ற விகடன் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும், நம்மீது சந்தேகத்தை எழுப்பி நமது நம்பகத்தன்மையை நொறுக்கிட முயற்சிப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது திட்டமிட்ட சூது! சனாதன சூழ்ச்சி! உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை நிலைகுலைய வைக்கும் சதிநிறைந்த முயற்சி!
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது?
 
மக்கள்நலன் மற்றும் நாட்டுநலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தொலைநோக்கோடு திமுக உள்ளிட்ட தோழமைகளோடு கைகோர்த்து நாமே உருவாக்கிய "மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி" ஆகியவற்றை நாம் ஏன் சிதறடிக்க வேண்டும்?
 
இது நம்மை மிக மிகப் பலவீனமானவர்களாகக் மதிப்பீடு செய்வோரின் நஞ்சு நிறைந்த மிகவும் கேடான ஒரு மனோநிலையாகும்.
 
மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில்  பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்?
 
இவ்வாறு நம்மைப் பற்றி இழித்தும் குறைத்தும் மதிப்பீடு செய்வதற்கு அவர்கள் கையாளும் அளவுகோள் தான் என்ன? ஆதாயம் கருதி அங்குமிங்கும் அல்லாடும் அற்ப அரசியல் செய்யும் சராசரி பேர்வழிகள் என்று நம்மைக் கருதுகிறார்களா?
 
திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும்  தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது.
 
தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான்  தொடர்கிறோம்!  உறுதியாகத் தொடர்வோம்!
 
இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும்.
 
குழப்பம் தேவையில்லை. "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவர்களாக மேம்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாடு! அதனை வென்றெடுப்பதற்கு நம்மை நாமே கட்டமைப்பு மற்றும் கருத்தியல் அடிப்படையில் இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றில் நம் கவனம் குவிப்போம்!
 
நம்மை-
இகழ்ந்து பேசி
பிழைப்போர் பிழைக்கட்டும்!
 
எள்ளி நகையாடி
நகைப்போர் நகைக்கட்டும்!
 
நமது இலக்கில் நாம்
குறியாக இருப்போம்!
 
நமது களத்தில் என்றும்
உறுதியாக நிற்போம்!
 
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்