கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டுமென்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மண்ணுக்கடியில் புதைந்தனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் நிலச்சரிவு சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.