வயநாடு நிலச்சரிவு.! கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதி.! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

Senthil Velan

செவ்வாய், 30 ஜூலை 2024 (13:28 IST)
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்   ரூ.5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று (30-7-2024) கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். 
 
இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட  முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
 
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், இ.ஆ.ப., மற்றும் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார். 

ALSO READ: கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை.! ஆர்.பி உதயகுமார் குண்டுக்கட்டாக கைது.! உச்சகட்ட பரபரப்பு..!!
 
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடியினை வழங்கிடவும்  முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்