வைரமுத்துவிற்கு ஆதரவு : விவேக்கை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (11:46 IST)
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

 
தினமணி நாளிதழ் சார்பில் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆண்டாள் குறித்த கருத்தரங்ககில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாளை அவமதித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதையடுத்து, இந்து மதத்தை அவர் அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை.  
 
ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
ஆனாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில், நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் “ தமிழுக்கும் இலக்கியத்துக்கும் திரைப் பாடலுக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர் கவிப்பேரரசு. அவர் படைத்த “மரங்கள்”கவிதை வனங்களின் தேசிய கீதம். நடக்கும் நிகழ்வுகள் வலியை ஏற்படுத்துகிறது. அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு கண்ணியம் காப்போம்.
 
அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும்.தாயார் ஆண்டாள் இறையருள் பெற்ற கவி.ஆழ்வார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். யாரோ வெளி நாட்டில் எழுதிய கட்டுரை தேவையற்றது. கவிப்பேரரசு மன்னிப்புக் கேட்பதும்;அந்தப் பெருங்கவியை மன்னித்தலும் பண்பாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதையடுத்து, வைரமுத்துவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக அவரின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில், பலர் மோசமான கருத்துகளையும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்