தினகரனுடன் மோதல் ; வெளியேறும் விவேக் : முடிவிற்கு வரும் பஞ்சாயத்து

சனி, 6 ஜனவரி 2018 (10:26 IST)
டிடிவி தினகரன் - விவேக் ஜெயராமன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமியிடமும், கட்சி பொறுப்பை டிடிவி தினகரனிடமும், ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை, ஜாஸ் சினிமாஸ், போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து வரசு செலவு கணக்குகளையும் இளவரசியின் மகன் விவேக்கிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் சசிகலா.
 
இங்குதான் பிரச்சனை தொடங்கியது. எல்லாவற்றுக்கும் விவேக்கிடம் போய் நிற்க வேண்டிய சூழ்நிலை தினகரனுக்கு ஏற்பட்டது. மேலும், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை ஆசிரியர் மருது அழகுராஜ் விவகாரத்திலும் தினகரனுக்கும், விவேக்கிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது மருது அழகுராஜ் நமது எம்.ஜி.ஆரிலிருந்து விலகி எடப்பாடி பக்கம் சென்றுவிட்டார். 
 
மேலும், ஜெ. சிகிச்சை வீடியோ வெளியான போது தினகரனுக்கு எதிராக கிருஷ்ணப்ரியா மீடியாவிற்கு பேட்டி கொடுத்த போது, விவேக் அவரை தடுக்கவில்லை என்பது தினகரனின் குற்றச்சாட்டு. மேலும், பெங்களூரை சேர்ந்த அம்ருதா தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, விவேக் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார். இதை தினகரன் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது.

 
இப்படி பல விவகாரங்களில் மோதல் ஏற்பட்டதால், சசிகலாவிற்கு விவேக் மீது புகார் தெரிவித்து கடிதம் எழுதினார் தினகரன். ஆனால், சசிகலா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்நிலையில்தான், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று தன்னுடையை இருப்பை நிரூபித்தார் தினகரன். தற்போது, விவேக்கிடமிருந்து அனைத்தையும் பறிக்க வேண்டும் என தினகரன் நினைக்கிறாராம். 
 
இந்நிலையில், சமீபத்தில் சசிகலாவை சந்திக்க விவேக் சென்ற போது, தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவரின் கொஞ்சம் பொறுத்துப் போ என சசிகலா கூற கோபத்தின் எல்லைக்கே சென்ற விவேக், நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன். இது தினகரனுக்கும் புரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை. இனிமேல் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் தினகரனே பார்த்துக்கொள்ளட்டும் என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டாராம்.
 
தினகரன் - விவேக் மோதல் உச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சசிகலா குடும்ப நிர்வாகங்களில் சில மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்