பல வழக்குகளில் நீதிமன்றம் தலையீடு : பாராட்டிய விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (15:17 IST)
சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் பல முக்கிய நிகழ்வுகளில் சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டியுள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில் சமீப காலமாக ஐகோர்ட்டே பல வழக்குகளில் நேரடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் அறிவிப்புகளை மக்கள் பிரச்சினைகளில் தந்திருப்பது, அனைவராலும் பாராட்டும் வண்ணம் உள்ளது. 
 
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி இறந்து போன டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது, அரசு நிலங்கள், நீர் நிலைகளை அரசு கவனத்தில் கொண்டு பராமரிக்க தவறினால் ஐகோர்ட்டே நேரடியாக தலையிட்டு அப்பணியை செய்ய உள்ளதாக அறிவித்தது, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் சிக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது என ஐகோர்ட்டு நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. 
 
சினிமா தயாரிப்பாளர் மதன் காணாமல் போன விவகாரத்திலும், காவல்துறை உடனடியாக கண்டுபிடிக்கவில்லை எனில் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று எச்சரித்துள்ளது. 
 
சென்னை ஐகோர்ட்டின் செயல்பாடுகள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்