கன்னியாகுமரியில் காமராஜருக்கு 1000 அடி உயர சிலை: விஜய் வசந்த் எம்பி கோரிக்கை

Mahendran
புதன், 24 ஜூலை 2024 (20:00 IST)
கன்னியாகுமரியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு 1000 அடி உயர சிலை நிறுவ வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை  விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நாட்டிற்கு செய்த நற்பணிகளை போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்திற்கு சிலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.
 
பாராளுமன்றத்தின் 377 வது விதியின் கீழ் இன்று கோரிக்கையை சமர்ப்பித்த விஜய்வசந்த் எம்.பி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்வதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும். 
 
இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெருக செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இதனால் பயனடைவார்கள். மேலும் கட்டுமான தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இந்த சிலையை நிறுவிய பின்னர் வணிக ரீதியாகவும், வேலை வாய்ப்புகள் பெருகும் வகையிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கன்னியாகுமரியின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியை நாம் காண வழி வகை செய்யும்.
 
மேலும் இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றினையும் அமைக்க வேண்டும். இந்த சிலை அமைக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும், கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின் இதனை கட்ட வேண்டும். 
 
பெருந்தலைவர் காமராஜரின் இணை இல்லா சரித்திரத்தை உலகெங்கும் உள்ளவர்கள் அறியும் வகையில் இந்த சிலையை நிறுவ அரசு முன் வர வேண்டும். இவ்வாறு விஜய் வசந்த் எம்பி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்