வேலூரில் மீண்டும் ரெய்டு- கையும் பணமுமாக சிக்கினார் திமுக பிரமுகர்

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (18:32 IST)
தேர்தல் விதிமீறலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் தொடங்க இருக்கும் நேரத்தில் திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் ரெய்டில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த சமயம் வருமானவரி துறையினர் நடத்திய ரெய்டில் துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலையில் இருந்து சாக்கு மூட்டைகளில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை மக்களுக்கு விநியோகிக்க வைத்திருக்கலாம் என கருதப்பட்டதால் தேர்தல் விதிமுறைகளின்படி வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதற்கு பிறகு வேலூர் தேர்தல் வரும் ஆகஸ்டு 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது தேர்தலில் அதே வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஐ.டி துறை இன்று மீண்டும் வேலூர் அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினர். அதிகாரிகள் வருவதை பார்த்த ஏழுமலை என்பவர் வீட்டின் பின்பக்கமாக பணத்தை வீசியுள்ளார். அதை கைப்பற்றிய அதிகாரிகள் ஏழுமலையிடம் விசாரித்த போது அது தனது பணம்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ஏழுமலை திமுகவின் முக்கிய பிரமுகரான நடராஜ் என்பவரின் சொந்தக்காரர். இவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பின்பு திமுகவில் சேர்ந்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கையில் மேலும் பல இடங்களில் பணம் சிக்கும் என ஐடி துறையினர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்