சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்டம் சொத்துகளை அறநிலையத்துறை மீட்டுள்ளது.
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் பதிவு செய்ய அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் சொத்துகளை மீட்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை அறநிலையத்துறை மீட்டுள்ளது. சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு ”இது வெறும் ட்ரெய்லர்தான்.. இனிதான் மெயின் பிக்சர். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதம் சரியாக முடிந்துள்ளது. கோவில் சொத்துகளை மீட்டு எடுப்பதுடன் குற்றம் செய்தவர்கள் மீது பாகுபாடில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல எந்தெந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவில்லை என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்” என கூறியுள்ளார்.