ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அருகே அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவன் படித்து வருகிறான், அப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
தமிழகம் முழுவதும் மாணவர்கள் சேர்க்கை இன்றி அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.இதைத்தொடர்ந்து திருவாடானை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் போதிய மாணவர்கள் இல்லாததால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன்.
இந்நிலையில் நாச்சியேந்தல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவன் மட்டும் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். வேறு மாணவர்கள் இல்லாத நிலையில் பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இருவர் மட்டும் பணியில் உள்ளனர்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-
இந்த பகுதி மக்கள் பிழைப்பு தேடி வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் ஆங்கில வழி கல்வி கற்க தனியார் பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் தான் இந்த திருவாடானை பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன, என்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நிறைய சலுகைகள் கிடைத்தாலும் பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசினால் தான் பெருமை என்று தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.
முக்கியமாக அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அப்போது அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை ஏற்படும்.