சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு திராவிட கட்சிகளையும் தோற்கடித்து அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று முறைப்படி எம்.எல்.ஏ ஆக பதவியேற்று கொண்டார். அவர் வரும் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். தனி ஒருவராக சட்டமன்றத்திற்கு செல்லும் தினகரன், ஆளும் கட்சிக்கு பெரும் குடைச்சலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தினகரன் சட்டசபைக்கு வருவது குறித்து அமைச்சர் உதயகுமார் கூறியபோது, 'ஆட்சியிலும் கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயல்கிறார். சட்டசபைக்கு வரும் தினகரன் அமைதியாக இருந்தால் எல்லாம் அமைதியாகவே நடக்கும். ஆனால் டிடிவி தினகரன் குட்டையை குழப்பி மீன் பிடிக்க முயல்கிறார் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும் பேரவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்கொள்ள தயார் என்று கூறிய அமைச்சர் உதயகுமார் டிடிவி தினகரன் புத்தரும் அல்ல காந்தியும் அல்ல எங்களுக்கு போதிக்க தேசத்தின் தியாகியும் அல்ல. வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தினகரன் எங்களை சந்தித்தால் அன்று எல்லாம் நன்றாக நடக்கும்' என்றும் கூறினார்.