நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 60ஆண்டுகளுக்கு பிறகு, 3வது முறையாக நமது அரசு ஆட்சி அமைந்துள்ளது என்றார்.
மக்களுக்கு நன்றி:
மகத்தான தீர்ப்பு வழங்கிய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர்,
தேர்தலில், எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை மக்கள் தோற்கடித்து உள்ளதாக கூறினார். தேர்தலில், மக்கள் அளித்த தோல்வியை ஏற்க சில எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராகுல் மீது விமர்சனம்:
அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தை சிலர் கையில் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய பிரதமர், அரசியல் அமைப்பு சட்டத்தை மாணவர்கள் புரிந்து கொண்டு விவாதம் நடத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.
20 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான்:
மக்கள் கொடுத்த வெற்றியால், இந்திய பொருளாதாரம், 3வது இடத்திற்கு செல்லும் என்றும் பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரத்தை 10 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேற்றியதாகவும் பிரதமர் கூறினார். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான் நடைபெறும் என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்
வறுமைக்கு எதிரான போர்:
அடுத்த 5 ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான போராட்டத்தை அரசு முன்னெடுக்கும் என்றும் வறுமைக்கு எதிராக போர் துவக்கி உள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 3வது வளர்ந்த நாடு என்ற பெருமையை அரசு படைக்கும் என்றும் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருப்பதாக தெரிவித்த அவர், குறைந்தபட்ச ஆதார விலையை இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு:
மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை துவக்கிய சிறிது நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் தலைவர் கார்கே பேச அனுமதிக்கும்படி வலியுறுத்தினர். பிறகு, பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.