மருத்துவமனையில் ஜெ ; தினகரனிடம் உள்ள 14 வீடியோக்கள்?

வியாழன், 21 டிசம்பர் 2017 (10:59 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் தொடர்ந்து பல சந்தேகங்களும், மர்மங்களும் நிலவுகிறது. காரணம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை அவரின் புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. தற்போது அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்டது என ஒரு வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் நேற்று காலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது எனவும், சசிகலாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைப்பழியை நீக்கவே இந்த வீடியோவை வெளியிட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.


 
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னும் இது போல் 14 வீடியோக்கள் தினகரன் வசம் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஜெ. மருத்துவமனையில் இருந்த போது சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா சில வீடியோக்களை எடுத்ததாகவும், அதை அவர் சசிகலாவிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கிருஷ்ணப்ரியாவின் செல்போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோக்கள் அடங்கிய சிம் கார்டை, தினகரனிடம் சசிகலா கொடுத்து, எந்த சூழ்நிலையிலும் இந்த வீடியோவை வெளியிடக்கூடாது எனக்கூறி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் தற்போது வெளியாகியுள்ளது.
 
தேவைப்பட்டால் அந்த வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என வெற்றிவேல் கூறியிருப்பதை பார்க்கும் போது, அடுத்தடுத்து தமிழகம் இன்னும் பல பரபரப்புகளை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்