இன்று புயல் உருவாக வாய்ப்பு.. 11 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Siva

புதன், 22 அக்டோபர் 2025 (08:24 IST)
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக உருமாற உள்ள நிலையில், விரைவில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
 
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் இந்த ஆழமான தாழ்வுப் பகுதி, இன்று நண்பகல் வேளையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த 24 மணி நேரத்துக்குள் இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்கி மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இது புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து இன்றுதான் தெரியவரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிகப் பலத்த மழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்