சபாநாயகர் தனபால் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் மேல் எடுத்த தகுதி நீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயண ராவ் தீர்ப்பு வழங்கியுள்ளார்
இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும், எம்.எல்.ஏக்களாக தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து தற்போது தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அதில் ‘இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. அரசியலில் எல்லாமே ஒரு அனுபவம்தான். இரட்டை இலை சின்னம் எங்கள் கையை விட்டு போனபோது இதையேதான் நான் கூறினேன். 18 எம்.எல்.ஏ க்களுடன் தீர்ப்பு குறித்து விவாதித்த பின்பு மேல்முறையீடு செய்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என முடிவு எடுக்கப்படும். அதற்காக இன்று மாலை குற்றாலம் புறப்பட இருக்கிறேன்.’
மேலும் இந்த தீர்ப்பு துரோகிகளின் செயலுக்கு ஒரு பாடம் என அதிமுக அமைச்சர் தம்பிதுரை கூறிய கருத்துக்குப் பதிலளித்த தினகரன் ‘நீதி மனறத்தின் மூலம் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. அது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும். யார் துரோகி என்பதை ஊடகங்களும் மக்களும் அறிவர். நான் துரோகியாக இருந்திருந்தால் ஆர் கே நகர் தேர்தலில் என்னை ஏன் மக்கள் வெற்றிபெற செய்தார்கள். மேலும் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்திருந்தால் யார் துரோகி என்று தெரிந்திருக்கும். இடைத்தேர்தல் ஏன் நடைபெறவில்லை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். விரைவில் எங்கள் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’ எனவும் கூறியுள்ளார்.