விழுப்புரம் அருகே உள்ள கோயிலில் பட்டியல் இன மக்கள் அனுமதிக்கப்படாத விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், தற்போது 22 மாதங்கள் கழித்து அந்த கோவில் திறக்கப்பட்டதாகவும், அந்த கோவிலில் பட்டியல் இன மக்கள் தற்போது வழிபாடு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள திரௌபதி அம்மன் கோவில், கடந்த 2023 ஆம் ஆண்டு பட்டியல் இன மக்கள் வழிபாடு செய்வதற்கு வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் கோவில் சீல் வைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பட்டியல் இன மக்கள் சுவாமி தரிசனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு பெயரில் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று முறைப்படி திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இன்று பட்டியல் இன மக்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆனால் வன்னியர் தரப்பு மக்கள் யாரும் இன்று வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக இரு தரப்பினரையும் வட்டாட்சியர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது என்பதும், தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.