போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியில் போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்பாட்டம்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (12:20 IST)
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதியான கரூர் தொகுதியில், கரூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத்தலைவர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டி.வி.பத்மனாபன், மாநில பொருளாளர் எஸ்.சம்பத் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.



மேலும் இந்த ஆர்பாட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே நடத்தப்பட வேண்டும், மாநில அரசின் பட்ஜெட்டில் வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையிலான பற்றாக்குறையை நிவர்த்திக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், எந்த துறையிலும் இல்லாத வகையில் அதிகாரிகள், பொறியாளர்கள்,, கண்காணிப்பு பிரிவில் உள்ளோர் ஒரு ஊதிய முறையிலும், தொழிலாளர்கள் வேறு ஊதிய முறையிலும் இருப்பதை ஒன்றுபடுத்தி அனைவரையும் அரசின் ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் கொண்டு வரவேண்டுமென்றும், பலமுறை இந்த பிரச்சினைகளை கோரி மனுக்கள் கொடுத்தும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மெத்தனப்போக்கில் ஈடுபட்டு வருவதினால், அவர் தொகுதியிலேயே இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை நடத்துவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் 11 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கரூரிலிருந்து சி.ஆனந்தகுமார்
அடுத்த கட்டுரையில்