உள்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து விடமாட்டம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிகளில் அமுதாவும் ஒருவர். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் களத்தில் இறங்கி சுறு,சுறுப்பாக பணியாற்றுபவர், மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி உடல் அடக்கம் நிகழ்வில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். அடுத்ததாக சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் முதலமைச்சர் தலைமையின் கீழ் இயங்கும் உள்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் திமுக அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியது.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டனர். அப்போது உள்துறை செயலாளராக இருந்த அமுதாவும் மாற்றப்பட்டு அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதலாக முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.