கடலூரில் பள்ளி வேன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் அடித்து இழுத்துச் சென்றதில் 3 பேர் பரிதாபமாக பலியானதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் செம்மங்குப்பம் பகுதி அருகே பள்ளி வேன் ஒன்று இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது அந்த வழியில் ரயில்வே கேட் ஒன்றை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரயில் பள்ளி வேனை மோதியதுடன், பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் பலர் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் பல பள்ளி மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் வரும் நேரத்தில் அப்பகுதி ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. காலையிலேயே நடந்துள்ள இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து கடலூர் - மயிலாடுதுறை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth