பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுடன், சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, தூய்மை பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், போராட்டத்தை கைவிட மறுத்துவிட்ட பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம், ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை ரத்து செய்தல், ஊதிய உயர்வு போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.