திமுகவுக்கு அடுத்த சிக்கல்: `சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து..!

Siva

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:12 IST)
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து இருப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த கால திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், அமைச்சர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய மூவரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்பு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்  விசாரணைக்கு வந்தது.
 
இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்த கடலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
 
மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து, ஆறு மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
ஏற்கனவே, அமைச்சர் துரைமுருகன் மீதான  சொத்து குவிப்பு  வழக்குகளில், அவரை விடுவித்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில், தற்போது இன்னொரு அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கும் விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால், திமுக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்