நோ பார்க்கிங் இடத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவரையும் சேர்த்து போக்குவரத்து போலீசார் வண்டியில் ஏற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
புனேவின் விமன் நகரில் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என போலீசார் போர்டு வைத்திருந்தனர். எனவே, அந்த வண்டியை அப்புறப்படுத்த போலீசார் அங்கு வந்தனர். ஆனால், அந்த வாலிபர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
எனவே, ஆத்திரமடைந்த போலீசார் அவரோடு சேர்த்து வாகனத்தை வண்டியில் ஏற்றி கொண்டு சென்றனர். சிறிது தூரம் சென்ற பின் அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். மேலும், அங்கு வண்டியை நிறுத்திய அந்த வாலிபருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து பலரும் போலீசாரை கண்டித்தனர். எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆய்வாளர் பி.ஜி. மிசல் தெரிவித்துள்ளார். அதேபோல், போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.