திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் இன்று காலை கோவில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து வீரராகவர் பெருமாளை வழிபட்டனர்.
நேற்று இரவு முதலே வெளியூர் மற்றும் ஆந்திர மாநில பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். கோவில் குளக்கரையில் அவர்கள் தங்குவது வழக்கம். இதனால் திருவள்ளூர் டவுன் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக அவர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தனர்.
காஞ்சி: திருக்காஞ்சியில், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் 2500 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற கெங்கவராக நதீஸ்வரர் கோவில் நதிக்கரையில் பித்ருதோஷம் நீங்க தர்ப்பணம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
இவ்வாறு அனைத்து பிரசித்திப்பெற்ற கோவில்களிலும் விடியற்காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்றில் குளித்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் கோவில் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.