காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்குள் !! காவிரியை முற்றிலும் உறிஞ்சும் டி.என்.பி.எல்

Webdunia
சனி, 12 மே 2018 (12:27 IST)
ஏற்கனவே தமிழக அளவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆளுகின்ற எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் போராடி வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமையுதோ, இல்லையோ அதற்குள் வறண்ட காவிரி ஆற்றில் இருந்து தமிழக அரசிற்கு சொந்தமான காகித ஆலையை இயக்குவதற்காக, வறண்ட காவிரியாற்றில், விதியை மீறி சிறிய அளவிலான கிணறுகள் அமைத்து, டி.என்.பி.எல்., நிறுவனம் தண்ணீரை திருட்டுத்தனமாக  எடுப்பதால், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட குடிநீர் திட்டங்கள் முடங்கி போய் வருகின்றன. மேற்படி மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாட்டால், தற்போது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கரூர் மாவட்ட காவிரி ஆற்றில், பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரூர் மட்டுமல்லாமல், நாமக்கல், திண்டுக்கல், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து, நாள்தோறும் சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கும் போது, ஆற்றின் நீரோட்டத்தை மாற்றி, புகளூரில் செயல்படும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (டி.என்.பி.எல்.,) நிர்வாகம் தண்ணீர் எடுப்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இங்கு, கரும்பு சக்கையை மூலப்பொருளாக வைத்து, நாள் ஒன்றுக்கு, 1,100 டன் காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருக்கும் தண்ணீரின் தேவைக்கு, கட்டிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில், நீரேற்று கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, காவிரி வறண்ட நிலையில் உள்ளதால், விதிகளை மீறி, சிறிய கிணறுகள் அமைத்து, டி.என்.பி.எல்., நிறுவனம் தண்ணீர் உறிஞ்சுகிறது. இதனால், கூட்டு குடிநீர் திட்டங்கள் முடங்கி, மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

மேலும், காவிரி கரையோரங்களில், வர்த்தக நோக்கில் லாரிகளில் தண்ணீர் திருடி, ஓட்டல், தனியார் தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையும், இதை கட்டுப்படுத்த முடியாத நிலையில், மாவட்ட நிர்வாகம் உள்ளது என, பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கும் நிலையில்., 5 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்காக, இதே பகுதியை சார்ந்த புஞ்சைப்புகளூர் பேரூராட்சி, தவிட்டுப்பாளையம், தளாவப்பாளையம், கட்டிப்பாளையம் என்று சுமார் 30 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 லட்சம் பொதுமக்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் அள்ளல்படும் நிலைக்கு இந்த அரசிற்கு சொந்தமான டி.என்.பி.எல் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும்,  காவிரியாற்றில் சிறிய அளவில், ஓடை போல் தேங்கி இருக்கும் தண்ணீரை கூட விடாமல் இந்த ஆலை நிர்வாகம் உறிஞ்சி விடுகிறது.



மூன்று யூனிட்டுகளில் தண்ணீர் தேவைக்கேற்ப ஒரு சில யூனிட்டுகளை நிறுத்தி தண்ணீர் பிரச்சினை போக்கிய பிறகு மற்ற யூனிட்டுகளை காகித ஆலை நிர்வாகம் இயக்காமல் அப்படியே வருவாயை மட்டுமே எண்ணி, வேலை செய்வதாகவும், மேலும்., பல அடி ஆழத்திற்கு சிறிய கிணறுகள் அமைத்து, அங்கிருந்து ரப்பர் குழாய்கள் மூலம் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் எடுத்து செல்கின்றனர் என அப்பகுதி சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமில்லாமல் விவசாயிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது காவிரியாறு வறண்டதால், காவிரி கரையோர கிராமங்களில் உள்ள போர்வெல்களில், பாதாளத்துக்கு தண்ணீர் சென்று விட்டது என்றும் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்த துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜய பாஸ்கர் இந்த பிரச்சினைகளை கண்டும் காணமால் உள்ளதாகவும், தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சி.ஆனந்தகுமார் கரூர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்