ராம மோகன ராவுக்கு மீண்டும் உயர் பதவி - தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (09:58 IST)
ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன ராவிற்கு மீண்டும் பதவி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, முன்னாள் தலைமை செயலாலர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. 
 
மேலும், அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு நெஞ்சுவலி என்று கூறி, மருத்துவமனையில் சேர்ந்தார் ராம் மோகன் ராவ். அந்நிலையில் அவரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராகப் பதவியேற்றார். 
 
இந்நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் உயர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
ஊழல் புகாரில் சிக்கியவருக்கு தமிழக அரசு மீண்டும்  பதவி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்