இனிமேல் 12ம் வகுப்பிற்கு 1200 மதிப்பெண் கிடையாது...

Webdunia
திங்கள், 22 மே 2017 (14:23 IST)
12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாடவாரியாக 200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருப்பதில் மாற்றத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


 

 
தற்போது பத்தாம் வகுப்புவரை மொத்தம் 5 பாடங்களும், ஒவ்வொரு பாடத்திற்கு 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள் என்பதுதான் நடைமுறை. அதன் பின் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் ஒரு பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் வீதம் 6 பாடத்திற்கு 1200 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்த தமிழக அரசு, ஒரு பாடத்திற்கு 100 மதிப்பெண்கள் வீதம் 6 பாடத்திற்கு 600 மதிப்பெண்கள் என குறைக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்வு, இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.
 
சமீபத்தில் 10ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் வெளியான போது, ரேங்க் என்கிற தரவரிசை முறையை நீக்கியது தமிழக அரசு. இதை பலரும் வரவேற்றனர். இந்நிலையில், பனிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண்ணில் மாற்றத்தை தமிழக அரசு விரைவில் கொண்டுவரவுள்ளது.
அடுத்த கட்டுரையில்