துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் காமெடி நடிகர் சோ அவர்களின் மனைவி சவுந்திரா ராமசாமி இன்று காலமானதை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த சவுந்திரா ராமசாமி வயது 84. சவுந்திரா ராமசாமி மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் பின்வருமாறு:
பாமக நிறுவனர் ராமதாஸ்: “துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான நண்பர் மறைந்த சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “புகழ்பெற்ற அரசியல் விமர்சகரும், எனது மரியாதைக்குரியவருமான மறைந்த சோ ராமசாமியின் மனைவி சவுந்தரா ராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
சசிகலா: மறைந்த சோ ராமசாமியும் அவரது மனைவி சவுந்தரா ராமசாமியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டிருந்தனர். ஜெயலலிதா தனது 60-ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது மறைந்த சோ ராமசாமி இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களிடம் ஆசிபெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். அம்மையார் சௌந்தரா ராமசாமியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”