மீண்டும் ஆரம்பிக்கும் கள்ளச்சாராய வியாபாரம் –திண்டுக்கல்லில் 3 பேர் பலி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (14:15 IST)
தமிழகத்தின் சிலப் பகுதிகளில் மீண்டும் கள்ளச்சாராய விற்பனை ஆரம்பித்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புறநகர் மற்றும் கிராமப் புறப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை பரவலாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு பள்ளப்பட்டி அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள கோழிக்கடை ஒன்றில் ஜெயச்சந்திரன் என்பவர் மறைமுகமாக விற்ற கள்ளச்சாராயத்தை பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாய்ராம், முருகன், தங்கபாண்டியன் உள்ளிட்ட 4 பேர் வாங்கிக் குடித்துள்ளனர்.

அந்த சாராயத்தைக் குடித்த கொஞ்சநேரத்திலேயே நான்கு பேருக்கும் வயிற்று வலி வந்துள்ளது. வலிக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அவர்கள் 4 பேரும் துடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு சாராயம் விற்ற ஜெயராமன் பயந்து போய் அங்கிருந்து ஓடி இருக்கிறார். சாராயம் குடித்த நான்கு பேரும் அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள இடம் என்பதாலும் காப்பாற்ற ஆட்கள் இல்லாமல் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்களைக் கண்டுபிடித்த பொதுமக்கள் 4 பேரையும் வாடிப்பட்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மற்றவர்களை மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கும் அனுப்பியுள்ளனர். வரும் வழியிலேயே மேலும் ஒருவர் உயிரிழந்துவிட மற்றொருவருக்கு இப்போது சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஊரைச் சேர்ந்த 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது அந்த ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏறபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்