சமூகநீதி பேசும் அரசுக்கு இது அழகல்ல - டாக்டர் ராமதாஸ்

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (12:22 IST)
பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை இரண்டரை ஆண்டுகளாக நிரப்பாமல் இருப்பது தான் சமூகநீதியா? என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒடுக்கீடு செய்யப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னடைவுப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.

ஆனால், இன்று வரை அவற்றில் ஒரே ஒரு பணியிடம் கூட நிரப்பப்படாதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால், 34 துறைகளிலும் காலியாக உள்ள பணிகளின் தன்மைக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட உரிய ஆள்தேர்வு அமைப்புகளின் வாயிலாக ஒற்றை சிறப்பு ஆள்தேர்வின் மூலம் அனைத்து பணியிடங்களையும் நிரப்பியிருக்க முடியும். அதற்கு அதிக அளவாக 6 மாதங்கள் கூட தேவைப்பட்டிருக்காது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்பாமல் காலியாகவே வைத்திருப்பது சமூகநீதி பேசும் அரசுக்கு அழகல்ல. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களை இல்லாத காரணங்களைக் கூறி, நிரப்பாமல் வைத்திருப்பது தான் பெரும் சமூக அநீதி ஆகும். இதற்கும் இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அதிலும், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட 8100 பணியிடங்களையும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 2300 பணியிடங்களையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பாமல் வைத்திருப்பது அந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்கு ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டை ஆகும்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது, உச்சநீதிமன்ற ஆணைப்படி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற சமூகநீதி சார்ந்த விஷயங்களில் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் நடந்து கொள்ளும் தமிழக அரசு, பட்டியலினத்தவர், பழங்குடியினரின் சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகளிலும் அதே அணுகுமுறையை பின்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தமிழக அரசு இனியாவது அதன் சமூகநீதிக் கடமைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான 10,400 பின்னடைவு பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்