"பரந்த மக்களுக்காக போராடுவேன்" என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூறியதை வரவேற்பதாக தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதே நேரத்தில், "திமுக, பாஜகவை எதிரி என்று கூறிய விஜய், அதிமுகவுடன் நட்புடன் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது" என்று பேட்டி அளித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரந்தூர் மக்களுடன் கோட்டை நோக்கிச் சென்று போராடுவேன் என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றால், விஜய் கூறியதை வரவேற்பதாக திருமாவளவன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
ஆனால், அதே நேரத்தில், "திமுக, பாஜக கட்சிகளை எதிரிகள் என்று விஜய் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். அதிமுகவை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?" என்ற கேள்வி எழுகிறது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
மேலும், விஜய் கடுமையாக உழைத்து மக்களிடம் செல்ல வேண்டும் என்றும், 'ரியாலிட்டியை புரிந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும்' என்றும் திருமாவளவன் அறிவுரை கூறினார். "எம்ஜிஆர் போல விஜய் வந்துவிடுவார் என தேவையில்லாமல் உசுப்பி விடுகிறார்கள். விஜய் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல, ரசிகர்கள் மாநாடுதான்," என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.