தேர்தலில் நிற்க விடாமல் மிரட்டுகிறார்கள்- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (23:55 IST)
அதிமுகவினர் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போடுகின்றனர் - உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள நபர்களை தேர்தலில் நிற்க விடாமல் மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.
 
கரூரை அடுத்த புகழூரில் அதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் விவேகானந்தன். இவரது வீடு கந்தம்பாளையத்தில் உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த போலீசார் அவரை கைது செய்ய வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கட்சி பொறுப்பாளர்கள் திரளாக அவரது வீட்டில் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரிடம் அதிமுகவினரிடம் விளக்கம் கேட்ட போது, கருப்பையா என்ற அரசு அலுவலரை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க வந்திருப்பதாகவும், அவர்கள் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து போலீசார் திரும்பி சென்று விட்டனர். 
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உள்ளாட்சி தேர்தலில் யாரும் போட்டியிடக் கூடாது என்பதற்காக ஆளும் கட்சியினர் போலீசை வைத்து மிரட்டி வருகின்றனர். அரசு ஊழியர்களின் உறவினர்களாக இருந்தால் பணியிட மாற்றம் செய்வதாகவும், தொழில் செய்பவர்களாக இருந்தால் கஞ்சா, குட்கா, விஷ சாராயம் வழக்கு போடுவதாக போலீசாரை வைத்து மிரட்டுகிறார்கள். கரூர் மாவட்டத்தில் திமுகவினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி மாற மறுக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். அவர்களை மிரட்டி திமுகவில் சேர்த்து விடுகின்றனர். இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை போகிறார். இது தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் போட்டுள்ளோம். இது போன்று அதிமுகவினர் மீது வழக்கு போடுவதற்கு பதிலாக என்மீது வழக்கு போடுங்கள், உள்ளே போக தயாராக இருக்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்