தமிழகம் வறட்சி மாநிலம்: அறிவிப்புகளை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (16:16 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
பருவ மழை பெய்யாமல் பொய்து போனதால் தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் பயிர் கருகியதால் தற்கொலை செய்துக்கொண்டனர். விவசாயிகள் சங்கத்தினர் தமிழகத்தை வரட்சி மாநிலமாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தினர். 
 
விவசாயிகள் தற்கொலையால் மாணவர்கள் மற்றும் சில அமைப்பினர் அவர்களுக்கு ஆதரவாக போராட தொடங்கினர். தமிழக அரசு சார்பில் கடந்த 3ஆம் தேதி விவசாய நிலங்களின் வறட்சி மற்றும் பயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சம்ர்பிக்க உத்தரவிடப்பட்டது.
 
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
வெள்ளம், புயல், வறட்சி ஆகிய இயற்கை இன்னல்கள் ஏற்படும்போது அவற்றை தடுப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
 
தமிழ்நாட்டில் வறட்சி சூழ்நிலை உருவாகியிருந்த நிலையில் அது பற்றி அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின், பயிர் பாதிப்பு நிலைமைகளை நேரில் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை வழங்க அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்களை உடனடியாக அமைத்திட உத்தரவிட்டிருந்தேன்.  

இது பற்றி அறிக்கை ஒன்றினையும் 3.1.2017 அன்று வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தபடி, அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் 3.1.2017 அன்றே அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வினை மேற்கொண்டு தங்களது அறிக்கையினை அரசுக்கு 9.1.2017 அன்று அளித்தனர்.
 
இந்த குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பேரில் விரிவான ஆலோசனைக் கூட்டம் 9.1.2017 அன்று  நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  இந்தக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும்  வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். வறட்சி காரணமாக விவசாயிகள் தங்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாது. பயிர் கடன் மத்திய கால கடனாக மாற்றி அமைக்கப்படும்.
 
தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாக்க பெரும் பொருட்செலவு ஏற்படும்.  எனவே, மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும்.  அதற்கான வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு, விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
 
கடந்த இரண்டு மாதத்தில் 17 விவாசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டனர். தற்கொலை செய்துக்கொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். வறட்சி நிவாரன கோரிக்கை மனு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். துர்வார ரூ.3,400 கோடி நிதி ஓதுக்கீடு.
 
நெல் பயிர் ஏக்கருக்கு, ரூ.5,465, மானாவாரி பயிர் ஏக்கருக்கு ரூ.3000, நீண்ட கால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 7,287, என்ற விதத்தில் நிவாரண தொகை வழங்கப்படும். சோளப் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வரையிலும், பயறு வகைகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 12,000 ரூபாய் வரையிலும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 45,000 ரூபாய் வரையிலும், மஞ்சள் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வரையிலும் பயிரிழப்புக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகை பெற இயலும்.
 
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக  உயர்த்தப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்