அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மிடாஸ் ஊழியர்கள் - தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (15:38 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்து முடிந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடத்தி வரும் மிடாஸ் மதுபான தொழிற்சாலை ஊழியர்கள் பங்கேற்ற விவகாரம் அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக அவரின் நீண்ட நாள் தோழி சசிகலா நியமிக்கப்பட்டார். அதன் பின் அவரை முதல்வர் பதவியில் அமர வைப்பதற்கான முயற்சியில் அவரின் குடும்பம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையே தனது ஆதரவு பற்றி தெரிந்து கொள்வதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார் சசிகலா.
 
பொதுவாக ஒரு அரசியல் தலைவர் ஒரு இடத்திற்கு வருகிறார் எனில், அங்கு கூட்டத்தை கூட்டி தனது பலத்தை காட்ட அந்த பகுதி நிர்வாகிகள், ஏராளமானோரை அழைத்து வருவார்கள். அது சசிகலா விஷயத்திலும் தொடர்கிறது.  கடந்த 6 நாட்களாக அவர் தினமும் காலை கட்சி அலுவலகம் வரும் போது, அங்கு ஏராளமானோரை குவித்துள்ளனர் அதிமுகவினர். பால்கனியில் நின்று அவர்களை பார்த்து வணக்கம் தெரிவித்து, ஜெ.வைப் போல் இரட்டை இலை சின்னத்தை காட்டி விட்டு, உள்ளே சென்று நிர்வாகிகளுடன் பேசினார் சசிகலா.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் மிடாஸ் கம்பெனியின் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. கூட்டம் குடிந்து அந்த பேருந்தில் சிலர் ஏறியுள்ளனர். ஆனால், அவர்கள் கட்சி தொண்டர்கள் போல் தெரியவில்லை. அவர்கள் மிடாஸ் ஊழியர்கள் என்பது பிறகுதான் தெரியவந்தது. இதனைக் கண்டு அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனராம். 
 
அவர்கள் எதற்காக அங்கே அழைக்கப்பட்டார்கள் எனத் தெரியவில்லை. கூட்டத்தை காட்டுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என அதிமுக தொண்டர்கள் பேசிக் கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்