வடகிழக்கு பருவமழை தொடங்கி பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இந்த ஆண்டில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவை பெறுகின்றன. வங்க கடலில் உருவாகும் புயல்கள் கரை கடக்கும் போது ஆண்டுதோறும் சேதங்களும் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை 2023 ஜனவரி 20ம் தேதி வரை மழைப்பொழிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ல் உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப்பகுதியை நோக்கி நகரும். தமிழகம் முழுவதும் நவம்பர் 15 முதல் 20ம் தேதி வரை இயல்பை விட அதிக மழை பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 25ம் தேதி உருவாகும் காற்றழுத்தம் சிறிய புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், மற்றபடி காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டல் ஆகியவற்றால் தமிழ்நாட்டில் அதிக மழை பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.