அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ள நேரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், நிதியமைச்சர் ஜெயக்குமாரும் அடுத்தடுத்து சந்தித்து பேசினர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து பேசினார் தம்பிதுரை. ஆனால் ஊடகங்களிடம் பேசிய தம்பிதுரை ஆளுநரை சந்தித்தது நட்பு ரீதியிலான சந்திப்பு தான் என மழுப்பினார்.
ஆனால் இந்த சந்திப்பின் பின்னணியில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிச்சமி அணியும் பேச்சுவார்த்தை நடத்தி விரவில் சேர உள்ளனர்.
ஓபிஎஸ் அணி சேரும் பட்சத்தில் அவர்கள் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆளுநரை சந்தித்த தம்பிதுரை தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கப்போவதாகவும், ஓபிஎஸ் அணியில் இருந்து 3 அமைச்சர் பதவி கேட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் வித்யாசாகருடன் எடுத்து சொன்னதாக கூறப்படுகிறது.
அமைச்சர் ஜெயக்குமாரும் ஒன்றரை மணி நேரம் ஆளுநருடன் விவாதித்துள்ளார். தற்போது உள்ள அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது அனைவரும் எதிர்பார்த்தது தான். ஆனால் யார் தலைமையில் ஆட்சி நடக்கும் என்பது தான் இன்னமும் முடிவாகவில்லை என கூறப்படுகிறது.