தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தொடர்ந்து பல அரசியல் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபமாக திமுக சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் என ஒரு பட்டியலை அவர் வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் கட்டியுள்ள லிமிடெட் எடிசன் ரஃபேல் வாட்ச் காரணமாக அவரே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
பல லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச்சை அண்ணாமலை வாங்கியது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் அதன் பில்லை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட அவர் அதை கோவையை சேர்ந்த சேரலாதன் என்பவரிடம் இருந்து ரூ.3 லட்சத்திற்கு வாங்கியதாக விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த அண்ணாமலை, வாட்ச்சின் சீரியல் எண் 147 தான் என்றும், தான் அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது எண் சின்னதாக இருந்ததால் தவறுதலாக 149 என படித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் வாட்ச்சின் சீரியல் எண் உள்ள பகுதியில் எச்சில் தொட்டு கரையை நீக்கி அந்த சீரியல் எண்ணை பத்திரிக்கையாளரிடமும் காட்டி அண்ணாமலை தெளிவுப்படுத்தினார்.