ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தாவிட்டாலும் நல்லது என்று ஹிந்து பத்திரிக்கை முதன்மை ஆசிரியர் என்.ராம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஹிந்து பத்திரிக்கை முதன்மை ஆசிரியர் என்.ராம், “தமிழகம் ஒரு முற்போக்கான மாநிலம். இங்குள்ள கிராமப்புற இளைஞர்கள் கைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கபடி உள்ளிட்ட எண்ணற்ற விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு இல்லையென்றாலும் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ”ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு = இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி இது மிருக வதையே” என்றும் குறிப்பிட்டுள்ளார்.