முடிஞ்சா தடுத்து பார்..! சவால் விட்டு காசாவுக்கு சென்ற க்ரேட்டா தன்பெர்க்! - கப்பலிலேயே கைது செய்த இஸ்ரேல்!

Prasanth K

திங்கள், 9 ஜூன் 2025 (08:39 IST)

காசா மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக கப்பலில் சென்ற சுற்றுசூழல் ஆர்வலர் க்ரேட்டா தன்பெர்க், பிரான்ஸ் நாட்டு எம்.பி உள்பட 12 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் 58 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். பிற நாடுகளில் இருந்து காசா மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், சமீபமாக அதையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்கள் பட்டினிச்சாவு அடைந்து வருகின்றனர்.

 

இஸ்ரேலின் இந்த செயல் மனிதாபிமானமற்றது என கூறிய ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் க்ரேட்டா தன்பெர்க், தான் காசாவுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லப்போவதாக அறிவித்தார். அதன்படி, பாலஸ்தீன ஆதரவு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிவாரணப் பொருட்களை ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு இத்தாலியில் இருந்து புறப்பட்டார். அவருடன் பிரான்ஸ் நாட்டு எம்.பி உள்பட 12 பேர் பயணித்தனர்.

 

இந்த கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்குள் நுழைந்தபோது இஸ்ரேல் ராணுவம் அவர்களை கைது செய்து கொண்டு சென்றது. அவர்கள் சில நாட்களில் தங்கள் சொந்த நாடுகளுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு விடுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. க்ரேட்டா தன்பெர்கை இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது குறித்து உலகம் முழுவதும் உள்ள தன்பெர்க் ஆதரவாளர்களும், சுற்றுசூழல் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்