'தரங் சக்தி 2024'-ந்னும் பெயரிலான சர்வதேச விமான கூட்டு பயிற்சியின் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்!

J.Durai
புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:01 IST)
கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் 'தரங் சக்தி 2024' எனும் பன்னாட்டு விமான கூட்டு பயிற்சி முகாம் கடந்த 6 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.அதில் இந்திய விமான படையுடன் இணைந்து ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படையினர்  கூட்டு விமான பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று துவங்கியது.இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு பொதுத்துறை மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர். இன்றும் நாளையும் பொதுத்துறை மற்றும் ராணுவத்தினர், ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் கண்காட்சியை பார்க்கும் வகையிலும் வருகிற 15ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து, விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய விமான படையைச் சேர்ந்த சாரங்க் உள்ளிட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் தேஜஸ், சுக்காய், மிக் ஆகிய போர் விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும்  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Typhoon போர் விமானம் மற்றும் பிரான்சின் ரபேல் ஆகிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தன.
 
முன்னதாக இந்திய விமானப்படையினரின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய விமானப்படை தலைமை தளபதி சௌத்ரி மற்றும் பயிற்சியில் ஈடுபட்ட நாடுகளின் விமானப்படை உயரதிகாரிகள் ராணுவ மரியாதையை ஏற்று கொண்டனர்.இதையடுத்து கூட்டு விமான பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானப்படை தளபதிகளுக்கு நினைவு பரிசுகளும்  வழங்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்