பேசுவது டிஜிட்டல் இந்தியா; எண்ணெய் அள்ளுவது வாளியில்: கனிமொழி கிண்டல்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2017 (12:59 IST)
டிஜிட்டல் இந்தியா பற்றி பேசும் நாட்டில் எண்ணெய் கழிவுகள் வாளியில்தான் அள்ளி அகற்றப்படுகிறது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கிண்டல் செய்துள்ளார்.


 

கடந்த ஜனவரி 28ஆம் தேதி, சென்னை அருகே எண்ணூர் துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த பம்பாயைச் சேர்ந்த டான் காஞ்சிபுரம் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த ஈரானைச் சேர்ந்த எம்டி பிடபுள்யூ மேப்லீ உள்ளிட்ட இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் கச்சாஎண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதம் அடைந்து அதிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்து பெருமளவிலான மாசுவை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மீன்கள், கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கின.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எண்ணெய் படலத்தால் கடல் பகுதிகள் கடுமையாக மாசடைந்துள்ளது. இதை அகற்றும் பணி கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து, இன்று கப்பல்கள் மோதிய விபத்தில் கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய பகுதியான எண்ணூர் பகுதியில் திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற பல வாரங்கள் ஆகும். சில வெளிநாடுகளில் பல மாதங்கள் கூட ஆகியிருக்கிறது. அதனால் இதை 2 அல்லது 3 நாட்களில் அகற்றப்பட்டுவிட்டது என்று சொல்லிவிட்டு போனால் அது நியாயம் இல்லை.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு வந்தால் அதனை வாங்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அவர்ளுடைய எதிர்காலம் மற்றும் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

ஆயிரக்கணக்கானோர் எண்ணெய் கழிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை. இன்றுதான் பலருக்கு கை உறையும், கால் உறையும் கொடுத்திருக்கிறார்கள்.

வாளியாலும், கையாலும்தான் இந்த எண்ணெய் கழிவை அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா பற்றி பேசும் நாட்டில் எண்ணெய் கழிவுகள் வாளியில்தான் அள்ளி அகற்றப்படுகிறது. நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்