கனமழையால் சுவாமிமலை தேரோட்டம் ரத்து.. பக்தர்கள் அதிருப்தி..!

Mahendran
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (10:21 IST)
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், சுவாமிமலை தேரோட்டம் கனமழையால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில்,  சுவாமிநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடத்த தயார் நிலையில் இருந்தது. தேர் அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டத்தை சிறப்பாக நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டு இருந்த நிலையில், கனமழை தொடர்ந்து பெய்ததால், தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்த நிலையில், கனமழை காரணமாக  திருக்கார்த்திகை திருநாளான இன்று நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக, தேர் முழுவதும் நனைந்து காணப்படுவதாகவும், தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், மழை விட்ட பிறகு சுவாமி அம்பாளை மட்டும் தேரின் உச்சி பீடத்தில் வைத்து, இறக்கிவிட கோவில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்