மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் இந்த போராட்டம் தொடங்கியுள்ளது
நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக திடீரென இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நேரம் ஆக ஆக பலர் கலந்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தப்பட்டது
சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விடிய விடிய சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் போராட்டம், தடியடி, இஸ்லாமிய அமைப்பினர் கைது ஆகிய செய்திகளை அறிந்த தமிழகத்தில் உள்ள பல இடங்களில் சிஏஏ சட்டத்துக்கு எதிராக திடீர் போராட்டம் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் போலீசாரிடம் இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் சென்னையில் விடிய விடிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது