சென்னை எழும்பூர் காஜாமேஜர் சாலையில் உள்ள தனி பங்களாவில் வசித்து வருகின்றனர் 85 வயதான பல் மருத்துவர் கோகுல்தாஸ் மற்றும் அவரது மனைவி. இவர்களது மகன் கல்யாண்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் வயதான தம்பதிகளுக்கு உதவி செய்ய வேலையாளாக லோகநாயகி மற்றும் ஷாலினி ஆகிய இரு பெண்களை வேலைக்கு வைத்துள்ளனர். லோகநாயகி மற்றும் ஷாலினி இருவரும் ஒரேப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
தனியாக வசித்தாலும் கல்யாண்குமார் தனது தந்தை வீட்டிலேயே பணத்தை பீரோவில் வைப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் தான் வைத்திருந்த 6 லட்சரூபாய் பணம் காணாமல் போனதால் தனது தந்தையிடம் விசாரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கோகுல்தாஸ், பகலில் நாங்கள் இருவரும் தூங்கி விடுகிறோம். தங்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லியுள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த கல்யாண், வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்துள்ளார். அவரை அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிட்டத்தட்ட 2 கிலோ அளவுக்கு நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் காணாமல் போனதை அறிந்துள்ளார். இதையடுத்து போலீஸில் புகாரளிக்க அவர்கள் ஷாலினி மற்றும் லோகநாயகி ஆகியோரை விசாரித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் லோகநாயகி தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்ததும், ஷாலினி தனது மகளுக்கு ஆடம்பரமாக மஞ்சள் நீராட்டு விழா நடத்தியதும் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இதனால் அவர்கள் பக்கம் சந்தேகம் திரும்ப அவர்களை விசாரிக்கையில் உண்மை வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் வயதான தம்பதிகளுக்கு மதிய உணவில் தூக்கமாத்திரையைக் கலந்துகொடுத்து தூங்கவைத்து கொஞ்சம் பீரோவுக்கு மாற்று சாவி செய்து கொஞ்சமாக நகைகளை திருடியுள்ளனர். வீட்டில் அதிக நகை இருந்ததால் அவர்களால் திருட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பனத்தை எடுத்ததால் சிக்கியுள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.