உங்கள் அறிவுரையை கேட்க வரவில்லை: ரங்கராஜ் பாண்டேவுக்கு சுபவீ சாட்டையடி கடிதம்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (14:11 IST)
தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டேவுக்கு சுப.வீரபாண்டியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-



வணக்கம். இன்று (17.09.2016) மாலை தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும் அழைத்தமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், வெளி அரங்கில், பொது மக்கள் முன்னிலையில்தான் நடைபெற்றது என்பதால், அது குறித்துப் பேசுவதில் பிழை ஏதும் இல்லை என்று கருதி இத்திறந்த மடலை எழுதுகின்றேன்.

நீங்கள் (அதாவது தொலைக்காட்சியினர்) எங்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்க மாட்டீர்கள் என்று நம்பியும், உங்களை மதித்தும்தான் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கின்றோம். ஆனால் இன்று என்னுடைய நம்பிக்கை பொய்த்துப் போனது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

நாங்கள் அனைவரும் பேசி முடித்தவுடன் இறுதியில் பேசிய நீங்கள் எல்லா அரசியல் கட்சிகளையும் குறை சொல்லியும், கேலி செய்தும் பேசிய விதம் ஏற்கத்தக்கதன்று. அதன்பின் நாங்கள் யாரும் விடை சொல்ல இயலாத நிலையில், புதுப் புதுக் குற்றச்சாற்றுகளை நீங்கள் முன்வைப்பது என்ன நியாயம்? இடையிடையே நீங்கள் குறுக்கிடுவதை நான் தவறு என்று கூறவில்லை. அப்போது எங்களால் விடை கூற முடியும். அது நிகழ்ச்சியைச் சுவை குறையாமல் நடத்திச் செல்லவும் உதவும். ஆனால் இறுதியில் எல்லாவற்றையும் அடுக்கிக் கொண்டே போவது எப்படிச் சரியாகும்?

"நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளோ, உள்ளாட்சித் தேர்தலுக்கு மனு வாங்கிக் கொண்டுள்ளனர்" என்று கூறி மக்களிடம் ஒரு பெரிய 'நியாயஸ்தன்" பட்டதைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். சரி, நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது , தந்தி தொலைகாட்சி எல்லா கேளிக்கை நிகழ்வுகளையும் நிறுத்தி விட்டதா? 24 மணி நேரமும் காவிரி நதி நீர்ச் சிக்கல் பற்றி மட்டும்தான் பேசுகின்றதா? ஒரு கட்சி என்று இருந்தால், பல வேலைகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றையும் பார்க்கத்தான் வேண்டும்.

இரு அணிகளிலும் கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்துச் சொல்லி, நல்லதொரு சிந்தனையோடு முடிப்பதுதான் வந்தவர்களுக்கு நியாயம் செய்வதாய் இருக்க முடியும். இறுதி பேச்சில் துரை முருகன் கூறியதாகச் சில செய்திகளை, குற்றச்சாட்டுகளாய்க் கூறுகின்றீர்கள். அவற்றுக்கெல்லாம் எந்த மறுப்பும் சொல்ல இடமில்லாமல் நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் நேசிக்கும் கட்சித் தொண்டர்கள் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

உங்களின் திறமையை, படிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இப்போதும் அதே நட்புடன்தான் இம்மடலை எழுதுகின்றேன். எனினும், ஒன்றை உங்களுக்குத் சொல்லியாக வேண்டும். உங்களின் அழைப்பை ஏற்று.உங்களின் நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பது, ஊடகங்களின் மூலம் அவரவர் நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வாய்ப்பாக இருக்குமே என்ற எண்ணத்தில்தானே தவிர, உங்கள் முன் கைகட்டி நின்று உங்களின் அறிவுரைகளைப் பெற்றுத் திரும்புவதற்காக அன்று!

எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள், எவ்வளவு இடக்கு மடக்காக வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள். அது உங்களின் தொழிலின் பாற்பட்டது. ஆனால் விருந்தினர்கள் பேசும் நேரம் முடிந்து போனபிறகு, புதிய குற்றச்சாற்றுகளைக் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்யாதீர்கள். அது நேர்மையாகாது!

என்று அதில் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்