சென்னை ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த மாணவி கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாணகுமார்(45). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் கீதா(19) அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கீதாவுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதற்காக புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவரிடம் கல்யாணகுமார் ரூ.1 லட்சத்தை கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் மகளின் கல்லூரி கட்டணம் செலுத்தவே அவரிடம் பணம் இல்லை. இதனால் ஜெயகுமாரிடம் சென்று, மகளின் வங்கி வேலைக்காக தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார்.
ஆனால் ஜெயகுமார் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் கீதாவால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை.
இதில் மனம் உடைந்த கீதா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் ஆர்.கே. நகர் காவல் துறையினர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.