திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை எதிரும், புதிருமாக இருந்த ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் அழகிரியை ஒன்று சேர்த்துள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 5 நாட்களாகவே சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. எனவே, ஏராளமான திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதியின் உடல்நிலை சீராகியுள்ளது.
கருணாநிதியின் உடல் நிலை ஸ்டாலின் - அழகிரி ஆகியோருக்கிடையே நீண்ட வருடமாக நிலவிய விரிசலை தகர்த்து எறிந்துள்ளது. கருணாநிதி உடல் நிலை மோசமானதால், கடந்த 27ம் தேதி தனது குடும்பத்தினரிடம் சென்னை வந்தார் அழகிரி. அதன் பின், கோபாலபுரம் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது, அவர் கூறிய சில ஆலோசனைகளை மு.க.ஸ்டாலின் ஏற்றுகொண்டதாகவும், அண்ணன் - தம்பி இருவரும் பேசிக்கொண்டது கருணாநிதி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், மு.க.அழகிரி, தினமும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார். மேலும், தனது மருத்துவ நண்பர் மூலம் கருணாநிதியின் மருத்துவ அறிக்கைகளை லண்டன் மருத்துவர் ஒருவரிடம் மு.க.அழகிரி ஆலோசனை செய்து வருவதாகவும், இதை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
இப்படி இருவரும் சேர்ந்து செயல்படுவது கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.